வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு.

வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.’துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

லடாக்கின்லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி கழிப்பறை இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள், அனந்தநாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில், கழிப்பறை கட்டும் பணி, 100 சதவீதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷ்த்வார் மாவட்டத்தில், கழிப்பறை கட்டும் பணி, 57 சதவீதத்தை எட்டியுள்ளது. இங்கு பணிபுரியும் அரசுஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது; அப்போது, 616 ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்படாதது தெரியவந்தது.

இதையடுத்து, கழிப்பறை கட்டும் வரை, அந்த ஊழியர்களின் மாத சம்பளத்தை நிறுத்தும்படி, மாவட்ட அபிவிருத்தி ஆணையர், அங்கிரேஸ் சிங் ராணா உத்தரவிட்டார்.