குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை

குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை

குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ-யில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள். படம்: க.ஸ்ரீபரத் G_SRIBHARATH ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் முன்னதாக பூட்டப்பட்டன.

டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் முன்பும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஆசிரியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, அனைவரும் டிபிஐ முதன்மை நுழைவுவாயில் முன்பு கூடத்தொடங்கினர்.

மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ரெக்ஸ் ஆனந்தகுமார், கே.கண்ணன், எஸ்.வேல்முருகன், டி.ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை குடும்பத்தினரோடு கைதுசெய்து போலீஸார் வேனில் ஏற்றிச் சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் மற்றும் அதன் அருகேயுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 3,000 ஆசிரியர்களையும் பிற்பகலில் விடுவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக போராட்டத்தின்போது தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கேட்கவில்லை. மாநிலத்தில் சக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்று போராடி வருகிறோம்.

அப்போது அரசு தரப்பில் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள், 2009-க்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்யும்படி, 7-வது ஊதியக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். ஆனால், நடைமுறைப்படுத்தப் படவில்லை. அதனால்தான் குடும்பத்தோடுஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுறபடுகிறோம் என்றார்.