நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 பல்கலைக்கழங்கள் போலியாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

12-ம் வகுப்பு தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில், போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி பட்டியலிட்டுள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுஜிசி சட்டத்துக்கு புறம்பாக அங்கீகாரம் இல்லாமல் 24 பல்கலைக்கழகங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

இவை போலி பல்கலைக்கழகங்கள் என அறிவிக்கப்படுகிறது. எவ்வித பட்டமும் வழங்க இந்த பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, இதுபோன்ற கல்வி நிறுவனங்களிடம் மாணவர்களும் பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

கமர்சியல் யுனிவர்சிட்டி, யுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, வக்கேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர்-சென்ட்ரிக் ஜுரிடிகல் யுனிவர்சிட்டி, இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி பார் செல்ப் எம்ப்ளாய்மென்ட், ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா அண்ட் வாரனாசியா சான்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா ஆகிய டெல்லியைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் இந்த போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

யுஜிசி கடந்த ஆண்டு வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 22 நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. – பிடிஐ