நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி
நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தும், தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு வரும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான அறிவிப்பில் தங்களது மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்காமல், கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இதில் மாற்றம் செய்ய முடியாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதனால் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இதற்காக தனியாக மொழி தெரியாத பிற மாநிலங்களுக்கு தேர்வு எழுதச் செல்ல நேரிடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்களும் ஒருவித மன அழுத்தத்துடனேயே இந்தத் தேர்வை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.