மிளகில் இவ்ளோ நன்மையா??

உணவில் காரத்துக்காக மிளகை பயன்படுத்தி வந்தோம். வெறும் உணவாக இல்லாமல் மருந்தாகவும் செயல்பட்டு அது நம்மை பாதுகாத்து வந்தது. தற்போது விலை உயர்ந்துவிட்ட காரணத்தால் மிளகை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டோம். தற்போது உலகம் முழுக்க கருப்பு மிளகை மருத்துவ காரணங்களுக்காக பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிளகின் மருத்துவ குணங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. பல வகையில் மிளகு நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது முடிவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில பலன்களைப் பற்றி இங்கு காண்போம்.

ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது:

நம்முடைய உடலில் ஆக்சிஜனேற்றத்தால் செல்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

இது வயோதிகத்தை விரைவுபடுத்துதல் தொடங்கி புற்று நோய் வரை பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிளகில் பிப்ரின் (piperine) என்ற வேதிப் பொருள் உள்ளது. இது மிகச் சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்டாக செயல்பட்டு ஆக்சிஜனேற்ற பாதிப்பை சமாளிக்கிறது.

மூளை செயல் திறனை மேம்படுத்துகிறது

மூளை செல்கள் செயல் இழப்பு, இறப்பைத் தாமதப்படுத்துகிறது. இதனால் அல்சைமர்ஸ், பார்கின்சன் போன்ற மூளை செல்கள் இறப்பால் ஏற்படக் கூடிய பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. பிப்ரின் மூளை செயல்திறன் மேம்பட உதவுகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது

விலங்குகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், எலி ஒன்றுக்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதற்கு மிளகு எக்ஸ்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேகமாக உயர்ந்த ரத்த சர்க்கரை அளவு, வேகமாக கட்டுக்குள் வரவும் ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மிளகை எடுத்து வந்தால் இன்சுலின் ரெசிஸ்டென் எனப்படும் இன்சுலின் செயல்திறன் குறைவு பாதிப்பு விலகும்.

கொழுப்பு அளவைக் குறைக்கிறது

உயர் கொழுப்பு அளவு இதய நோய், மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோயில் முதல் இடத்தில் மாரடைப்புதான் உள்ளது. மிளகு எடுத்துக்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மிளகை எடுத்து வந்தவர்களுக்கு ரத்தத்தில் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு குறைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது.

ஊட்டச்சத்து கிரகிக்க உதவுகிறது

மிளகு நம்முடைய வயிறு கால்சியம், செலீனியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் கிரகிக்கப்படுவதை அதிகரிக்கச் செய்கிறது. இதே ஆற்றல் மஞ்சள், கிரீன் டீ-க்கும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிறு செரிமான மண்டலத்தில் வாழும் நல்ல பாக்டீரியா காலனி ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.