குளிர்காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்..

குளிர்காலம் வந்தாலே பலவகை புதிய பழங்களும், காய்கறிகளும் சந்தையில் கிடைக்க ஆரம்பித்துவிடும். பழங்கள் நம் உணவில் இன்றியமையாத பகுதியாகும், ஏனெனில் அவை நமக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளை வழங்குகின்றன. பல்வேறு பழங்களின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலை நோய் மற்றும் சிக்கலிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. குளிர்ந்த காலநிலை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதால் குளிர்காலத்தில் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் குளிர்கால பழங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.

ஆரஞ்சு:

இந்தியாவில் குளிர்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் ஒரே பழம் ஆரஞ்சுப் பழமாகத்தான் இருக்க முடியும். ஆரஞ்சு பழம் குளிர்காலத்தில் சாப்பிடலாம் சளி பிரச்சனைகள் உண்டாகாது. ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது, இது தமனி – இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குளிர்காலத்தில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை பலரும் உட்கொள்கிறார்கள், ஏனெனில் அவை உற்பத்தி செய்யும் கலோரிகள் உடலை சூடாக வைத்திருப்பதால் தான். இருப்பினும், இத்தகைய உணவுகள் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தூண்டி ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்துகிறது. வைட்டமின் C இன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன.

வைட்டமின் C கொலாஜன் உற்பத்தியிலும் உதவுகிறது, இது குளிர்காலத்தில் தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது. குறிப்பாக ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலச்சத்து நிறைந்த பழங்கள் உடல் நலத்திற்கு ஏற்றது. இதில் உள்ள பொட்டாசியம், போலேட், தாது உப்புகள், நார்ச்சத்து உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது. மொசாம்பி அல்லது எலுமிச்சை போன்ற பழங்களிலும் பல நன்மைகள் உள்ளன.

இந்தியன் பிளம் :

இந்திய ஜுஜூப் அல்லது இந்திய பிளம் என்பது ஆசியாவின் சில பகுதிகளில் அதிகம் விளையும் பழங்கள் ஆகும். இது அரிய பெர்ரிகளில் ஒன்றாகும், மேலும் இந்தியாவில் ஏராளமாக இது வளர்க்கப்படுகிறது. இந்த பழங்கள் பிப்ரவரி மாதத்தில் கிடைக்கின்றன, அவை பச்சையாக உட்கொள்ளவோ ஊறுகாய் தயாரிக்கவோ பயன்படுத்தப்படுகின்றன. இந்திய பிளம் ஏராளமான பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டுள்ளது, இது சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு உணவு நுகர்வு காரணமாக குளிர்காலத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது. பிளம்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது. ஸ்ட்ராபெர்ரி :

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை பிரி ரேடிக்கல் எனப்படும் புற்றுநோயை உருவாக்கும் ஒழுங்கற்ற செல்கள் ரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் இத்தகைய செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிகளில் வைட்டமின் C நிறைந்துள்ளதுடன் ஆன்டிஆக்ஸிடன்ட் அந்தோசயினினும் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தமனி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க ஸ்ட்ராபெர்ரி உதவுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

அன்னாசி:

இனிப்பான அன்னாசி பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ப்ரோமைலின் என்ற அழற்சி எதிர்ப்பு நொதியை இந்த பழம் கொண்டுள்ளது. இது கீல்வாத நோயாளிகளுக்கு ஏற்படும் அழற்சி வலியைக் குறைக்கிறது, வயிற்றில் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகவும் இந்தப் பழம் போராடுகிறது மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அன்னாசிப்பழத்தை ஜாம், ஜூஸ், வற்றல் செய்தும் சாப்பிடலாம். அன்னாசிப்பழப் பாயசம் மிகவும் ருசியானது. இந்த குளிர்காலத்தில் இந்த பழத்தை தொடர்ந்து 40 நாள்கள் இந்தப் பாயசத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல்நலம் மேம்படும். உடல் பளபளப்பாக மின்னும். பார்வைக்குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி படைத்தது இந்தப் பழம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்கொண்டது.

மாதுளை பழம் :

குளிர்காலத்தில் நாம் செய்யவேண்டிய ஆரோக்கியமான தேர்வு என்றால் அது மாதுளம்பழம் உண்பதே. உடலின் இரத்த அழுத்த மட்டங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஹைப்பர்டென்ஷன் நிலைக்கு நாம் செல்வதை மாதுளம்பழம் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான செரிமான சக்தியைத் தரும் நார்ச்சத்து மாதுளம்பழத்தில் அதிகம் உள்ளது. இறுதியாக, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் மாதுளம்பழச்சாறை தொடர்ந்து உண்டு வந்தால் வலி சரியாகி விடும். மேலும் உடலில் சீரான இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள், இரத்த சோகை இருப்பவர்களுக்கு மாதுளை பழம் சிறந்த தேர்வாக இருக்கும்.

கிவி :

கிவி பழத்தை நாம் தாராளமாக நமது உணவில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் இந்த கிவி தான். இது சுவையாக இருப்பதோடு மனிதருக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துக்கள் என ஏராளமான நிறைந்துள்ள ஒரு சூப்பர் ஃபுட் உணவாகும். குளிர்காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன, ஏனெனில் உடல் வளர்சிதை மாற்றம் ஆற்றலைச் சேமிக்கவும், வெப்பத்தை உருவாக்கவும் செய்கிறது. ஆய்வுகளின்படி, கிவி பழங்களை உட்கொள்வது ஆக்டினிடின் என்ற நொதி மூலம் நமது செரிமானத்திற்கு உதவுகிறது. இது புரதத்தை உடைக்கிறது. கிவிஸில் வைட்டமின் C, வைட்டமின் E, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பிற அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன.

குளிர்காலத்தில், பருவகால நோய்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு, நாம் மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களிலும் சிறிது கவனமாக இருப்பது நல்லது. இதன் அடிப்படையில், மேற்சொன்ன பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து கொண்டு இந்த குளிர்காலத்தில் ஹெல்தியாக இருங்கள்