இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு
அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று முன்தினம் அங்கிருந்து போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 4-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகலில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் இருந்து 10 பேர், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவை சந்திக்க சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

பேச்சுவார்த்தையின்போது ‘போராட்டத்தை கைவிட்டு வாருங்கள், உங்களது கோரிக்கைகளை நாங்கள் பரிசீலிக்கிறோம்’ என்று முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து போராட்டக்குழுவினர் தலைமை செயலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக மாலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை போராட்டக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்து, போராட்டக்குழுவினர் பழச்சாறு குடித்து உண்ணாவிரதத்தை முடித்து கொண்டனர். இந்த 4 நாட்கள் உண்ணாவிரதத்தில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தை முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு நபர் கமிஷனில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளும் ஒவ்வொரு துறைகளின் கோரிக்கைகளும் உள்ளன.

அவற்றை அரசு பரிசீலித்துக் கொண்டு இருக்கிறது. சங்கத்தின் தலைவர் ராபர்ட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். அதுவும் நிலுவையில் இருக்கிறது.

இது 2009-ம் ஆண்டு ஏற்பட்ட முரண்பாடு என்ற முறையில் அரசு அதை பற்றி பரிசீலித்துக் கொண்டுள்ளது.

உண்ணாவிரதம் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அரசின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று இருக்கிறார்கள்.

ஒரு நபர் கமிஷன் பரிந்துரை வந்தவுடன் முதல்-அமைச்சரிடம் பேசுவேன்’ என்றார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போராட்டக்குழுவின் நிர்வாகிகள் நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர்.

அவர்களின் அறிவிப்புக்காக இடைநிலை ஆசிரியர்கள் ஆவலோடு காத்து இருந்தனர்.

அவர்களிடம் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நம்முடைய உண்ணாவிரதத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம்.

உடனடியாக அரசு ஆணை பெற முடியாவிட்டாலும், 3 மாதம் கழித்து நாம் எதிர்பார்த்த அரசு ஆணை கிடைக்கும் என்று 99 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. மீதம் உள்ள ஒரு சதவீதம் தவறினால், உச்ச கட்ட போராட்டத்தை தமிழக அரசு சந்திக்கும் என்று கூறினார். முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசுடன் நடந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில், பள்ளிக்கல்வி துறை செயலாளர் எங்களுடைய கோரிக்கையை, நியாயத்தை புரிந்து கொண்டு மனுவை பெற்று, அதனை ஒரு நபர் கமிஷனுக்கு அளித்து, நகலையும் எழுத்துப்பூர்வமான நகலையும் தருவேன் என்று உறுதியளித்துள்ளார்.

அமைச்சரையும் சந்தித்தோம். அவரும் ஒருநபர் கமிஷனில் உங்களுடைய ஊதியக்குழுவை களைய முதல்-அமைச்சர் வரை சென்று அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

அதனை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். புறப்பட்டு சென்றனர் இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் அங்கிருந்து தங்கள் உடைமைகளுடன் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏதுவாக கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு போலீசார் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து இருந்தனர்.