மினி கிளினிக் பணி நியமனம்

தமிழகத்தில் உள்ள, 2,000 மினி கிளினிக்குகளில் பணியாற்ற, ஓரிரு நாட்களில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் உதவியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்,” என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் நேற்று வரை, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து 743 பேர், கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டுஉள்ளனர். தமிழகத்திற்கு ஏற்கனவே, 12 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பு மருந்துகள் வந்து உள்ளன. கூடுதலாக மருந்து வழங்குவதாக, மத்திய அரசு உறுதி அளித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடப்பட்ட, ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 743 பேரில் ஒருவருக்கு கூட எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படவில்லை. தடுப்பூசி குறித்து எந்த விதமான தயக்கமோ தாமதமோ தேவையில்லை.அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும். அம்மா கிளினிக்கை பொறுத்தவரை, சுகாதாரத்துறை சார்பில் தலா, 2,000 டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார உதவியாளர்கள் ஆகியோர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும். அந்தந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்