பெண்கள் உடல்நலம் சார்ந்த ஸ்மார்ட் வாட்ச்: கார்மின் நிறுவனம் அறிமுகம்

பெண்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு லிலி எனும் புதிய வகை ஸ்மார்ட் வாட்ச்சை கார்மின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்தது.

கார்மின் கனெக்ட் ஆப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் மூலம் கர்ப்பம் சார்ந்த அறிகுறிகள், குழந்தையின் அசைவு, ரத்த அளவு உள்ளிட்ட தரவுகளைப் பதிவேற்றம் செய்து தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளலாம். உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றுக்கான குறிப்புகளை இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெறலாம்.

இதுபற்றி கார்மின் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் அலி ரிஸ்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது புதிய ஸ்மார்ட் வாட்ச் மூலம் மேலும் நிறைய பெண் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் ஆரோக்கியமான வாழ்வை வாழ இந்த ஸ்மார்ட் வாட்ச் பயன்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அம்சத்தின் மூலம் கர்ப்பத்தைக் கண்டறிவது, மாதவிடாய் காலத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பெண்கள் உடல்நலன் சார்ந்த அம்சங்களையும் லிலி ஸ்மார்ட் வாட்ச் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் இதன் விலை மதிப்பு ரூ. 20,990.