புது ரேஷசன் கார்டு! எப்படி விண்ணப்பிப்பது?

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளை மாநில அரசு அளித்து வருகிறது. மானிய விலையில் பொருட்களைப் பெறுவதற்கும் ரேஷன் அட்டை அத்தியாவசியமானதாக இருக்கிறது. பொங்கல் தொகுப்பு பரிசுகளை வாங்குவதற்கு ரேஷன் அட்டைகளைத் தொலைத்திருந்தாலும், பதிவு செய்து வைத்திருக்கும் மொபைல் எண்ணைக் கொண்டு தொகுப்பு பரிசைப் பெறலாம் என்று அறிவித்திருந்த நிலையில், ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள் புது ரேஷன் கார்டு பெறுவது பெரிய சிக்கல் என்றே இது நாள் வரையில் நினைத்திருந்தார்கள்.

இப்படி புது ரேஷன் கார்டு பெறுவதற்கு தரகர்களிடம் சென்று பொதுமக்கள் அதிகளவில் பணத்தைக் கொடுத்து ஏமாறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இருபது ரூபாய் செலவில் நீங்கள் தொலைத்த ரேஷன் கார்டுக்கு பதிலாக டூப்ளிகேட் ரேஷன் கார்டு வாங்கிக் கொள்ளலாம்.
இந்த ரேஷன் அட்டைக்கான விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளைத் தொலைத்தவர்கள், பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் அனைவருமே www.tnpds.gov.in என்ற பொது வினியோக திட்ட இணையதளத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் அட்டையில் திருத்தங்கள் செய்தவர்களுக்கும், தொலைத்தவர்களுக்கும் 20 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, இந்த இணையதளத்திற்குச் சென்று, ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின், உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ரேஷன் கார்டு தயாரானது, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, உங்கள் புது ரேஷன் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.