தமிழ் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்களும்! வணங்க வேண்டிய தெய்வங்களும்!

ஏப்ரல் 14ஆம் தேதி பிலவ வருடம் பிறக்கிறது. இவ்வருடத்திய பலன்கள் அனைவருக்கும் சிறப்பாக இருக்க பிரார்த்திப்போம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகையான தானங்களைச் செய்து வருவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுபோல அவரவர்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வருவதன் மூலம் எதையும் சாதிக்க கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். இவ்வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாக நீங்கள் செய்ய வேண்டிய தானங்களும்! வணங்க வேண்டிய தெய்வங்களும்! என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் உங்களுடைய ராசிக்கு நீங்கள் உங்களால் முடிந்த அளவில் சாலையோர மக்களுக்கு வெயிலில் இருந்து பாதுகாக்கும் வண்ணம் குடை, விசிறி போன்றவற்றை தானம் செய்யலாம். சுக்கிர பகவானை வழிபட சொந்த வீடு, மனை அமையும். அனைவரையும் அனுசரித்துச் செல்லும் உங்கள் ராசிக்கு நன்மையே நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் உங்களுடைய ராசிக்கு நீங்கள் கோவில்களில் எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்யலாம். அன்னையின் பாதத்தை சரண் அடைந்து அவளை வணங்கினால் இவ்வருடம் முழுவதும் செல்வ வளம் செழிக்கும். காண்போரை தன்வசம் இழுக்கும் திறன் உள்ள உங்கள் ராசிக்கு அற்புதமான வருடமாக அமையும்.மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் உங்களுடைய ராசிக்கு நீங்கள் பிரதோஷ கால பூஜைகள் செய்வதும், அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றத்தை உண்டாக்கும். சிவ வழிபாடு செய்து வில்வ அர்ச்சனை செய்து வாருங்கள். கேட்ட வரமெல்லாம் பலிதமாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் உங்களுடைய ராசிக்கு நீங்கள் குருபகவான் வழிபாடு செய்ய தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் அனைத்தும் வெற்றியுடன் நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். செல்வ வளம் செழிக்க குபேரனை நாணய அர்ச்சனை செய்து வணங்குங்கள். ஊனமுற்றவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தானம் செய்யுங்கள்! முன்னேற்றம் நிச்சயம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் எதிலும் முன்னேற்றம் காண மகா விஷ்ணுவிற்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடுங்கள். சனிக்கிழமை தோறும் விஷ்ணு வழிபாடு செய்ய சகலமும் ஜெயமாகும். தந்தை இல்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யுங்கள்! நிச்சயம் செழிப்பான வாழ்வு அமையும்.கன்னிகன்னி ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் ராகு, கேது வழிபாடு செய்ய தோஷங்கள் யாவும் விலகும். புற்றுக்கு பால் ஊற்றி வழிபட்டு வந்தால் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்கி செல்வம் பெருகும். கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தொல்லை நீங்கும். வாழ்வு செழிக்க பசுவிற்கு வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை தானம் செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சனி பகவான் வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். மேலும் எள் கலந்த உணவை காகத்திற்கு வைத்து விட்டு பின் நீங்கள் உணவு சாப்பிட்டு வாருங்கள். ஏழை எளிய குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கி கொடுங்கள் நல்லவையே நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவ சிவபார்வதியை தம்பதியராக போற்றி வழிபடுங்கள். குடும்ப பிரச்சினைகள் தீர சோமவார விரதம் இருப்பது நல்ல பலன் கொடுக்கும். சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும். துன்பங்கள் தொலைய சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள பொருட்களை தானம் செய்து வாருங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் செழிப்பாக அமைய ஆஞ்சநேய வழிபாடு மேற்கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். தடைகளை தகர்த்து எறியும் சக்தி அவரிடம் உண்டு. ராம நாமம் ஜெபிக்க தொட்டதெல்லாம் துலங்கும். மனக்கவலைகள் அகலும். உங்களை சுற்றி இருக்கும் பிரச்சனைகள் தீரவும், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வடை மாலை சாற்றி வழிபடுங்கள். அங்கு வரும் பக்தர்களுக்கு தயிர்சாதம் தானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் செழிப்பாக அமைய விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுங்கள். அரச மரப் பிள்ளையாரை சுற்றி விரதமிருந்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபிட்சம் பெற வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வாங்கி வையுங்கள். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலம் வாங்கி கொடுத்தால் போதும்! துன்பங்கள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் அமோகமாக இருக்க நீர் மோர் தானம் செய்து வாருங்கள். தாகம் தீர்க்கும் நீர் மோர் கோவில்களில் அல்லது பொது இடங்களில் தானம் செய்வதன் மூலம் பல்வேறு நலன்களை பெறலாம். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வந்தால் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழில் வளம் சிறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சிறப்பான பலன்கள் உண்டாக அஷ்டலட்சுமிகளை துதியுங்கள். அஷ்டலட்சுமிகளையும் துதித்து வர தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். துன்பங்கள் அகல அம்பிகையை வழிபடலாம். பசித்தவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பதும், கணவனை இழந்த பெண்களுக்கு உதவி செய்வதும் உங்கள் ராசிக்கு நற்பலனை கொடுக்கும்.