உறுதியான எலும்புகளை பெற பின்பற்றவேண்டிய வழிமுறைகள்

உறுதியான எலும்புகளை கட்டமைப்பது மிகவும் அவசியமானது. குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்கி வளர் இளம் பருவம் கடந்த 30 வயதை நெருங்கும்போது எலும்பு அடர்த்தி அதன் உச்சத்தை எட்டுகிறது. அதன் பிறகு எலும்பு அடர்த்தி குறையத் தொடங்குகிறது. இதை எதிர்கொண்டு எலும்பை உறுதிபடுத்தவில்லை என்றால் வாழ்வின் பிற்காலத்தில் எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உறுதியான எலும்புகள் வேண்டும் என்றால் முதல் விதி அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அது எலும்பு செல்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது. வைட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடண்டாக செயல்பட்டு எலும்பு செல்களில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது

பூண்டு, வெங்காயத்தில் அதிக அளவில் கந்தகம் உள்ளது. இது எலும்புக்கு மிகவும் அவசியம்.

எலும்புகள் உறுதியாக இருக்க புரதச்சத்து மிகவும் அவசியம். எனவே, ஆரோக்கியமான புரதச்சத்துக்களை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் புரதச்சத்து நிறைந்த ரெட் மீட் உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிக அளவில் இந்த வகையான இறைச்சிகளை எடுப்பது எலும்பு அடர்த்தியை பாதிப்படையச் செய்யும்.

எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியம் மிகவும் அவசியம். எனவே, பால் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்தை ஈர்க்க வைட்டமின் டி மிகவும் அவசியம். எனவே, உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சூரிய ஒளியிலிருந்து நம்முடைய உடலே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்துகொள்ளும். எனவே, காலை, மாலை நேரத்தில் வெயிலில் நடப்பது எலும்புகளை உறுதியாக்கும்.

கார்பனேட்டட் குளிர்பானங்கள், காபி, டீ போன்ற பானங்களை எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கார்பனேட்டட் பானங்களில் உள்ள ரசாயனம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற்றும். இதற்கு பதில் கால்சியம் சத்து நிறைந்த பாலை அருந்தலாம்.

சிகரெட் பழக்கம், மதுப் பழக்கம் எலும்பு அடர்த்தியைப் பாதிக்கும் மோசமான காரணிகள் ஆகும். எனவே, அந்த பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும் எலும்புகளை பாதுகாக்க உதவும். உடல் எடை அதிகரிக்கும்போது அது எலும்பு மூட்டுகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். உடல் எடை பி.எம்.ஐ அளவுக்கு குறைவாக செல்லும்போது அது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்தி குறைபாட்டை ஏற்படுத்திவிடலாம். எனவே, உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம்.

உடற்பயிற்சி செய்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். கார்டியோ பயிற்சிகளுடன், வெயிட் பயிற்சி எனப்படும் ஜிம் பயிற்சிகளை செய்வது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளை உறுதியாக்கும்