கண்டங்கத்திரியின் மருத்துவ குணங்கள் !!

குப்பை மேட்டில் காணப்படும் மிகச் சிறந்த மூலிகை தாவரம் கண்டங்கத்தரி. நீல நிறத்தில் பூக்கும், சிறிய கத்தரிக்காய் சைஸில் காய்க்கும் என்பதால் இதை கண்டங்கத்தரி என்று அழைக்கின்றனர். இதன் வேர் முதல் காய் வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டதாக உள்ளது. இதனால் இதனை கற்ப மூலிகை என்று சித்தர்கள் அழைத்தனர்.

முட்கள் கொண்ட மூலிகைகள் சுவாசப் பிரச்னையை போக்கும் வகையில் உள்ளன. கண்டங்கத்தரி, தூதுவளை, ஆடாதோடை ஆகிய மூலிகைகளில் இலைகளை சம அளவில் எடுத்து காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, இரவு என இருவேள ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவாசப் பிரச்னைகள் சரியாகும்.

இந்த பொடியுடன் கூடுதலாக வால்மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை தலா ஐந்து கிராம் எடுத்து இடித்து கஷாயம் வைத்து, நன்கு சுண்டவிட்டுக் குடித்து வந்தால் ஆஸ்துமா, வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும்.

உடல் எடை கூடவில்லை என்று புலம்புபவர்கள் திணமும் கண்டங்கத்தரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும். ஈறு பிரச்னைகளை போக்கும். பழத்தை உலர வைத்து இடித்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட இருமல் பிரச்னை மறையும்.

கண்டங்கத்தரி இலையைப் பறித்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் தலைவலி, கீல்வாதம், உடல் துர்நாற்றம் போன்றவை சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, கண்டங்கத்தரி வேர் 30 கிராம், சுக்கு ஐந்து கிராம், சீரகம் ஐந்து கிராம், கொத்தமல்லி ஒரு கைப்பிடி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதை ஒரு நாளைக்கு 4 முறை என தொடர்ந்து குடித்துவந்தால் காய்ச்சல், நுரையீரல் பிரச்னைகள் நீங்கும்.

கண்டங்கத்தரி இலையைப் பறித்து சாறு எடுக்க வேண்டும். அதே அளவுக்கு ஆளி விதை எண்ணெய் விட்டு நன்கு சுண்ட காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யைப் பாதத்தில் தடவி வந்தால் பாத வெடிப்பு உள்ளிட்ட பாதம் தொடர்பான பிரச்னைகள் மறையும்.