நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள், நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்றவை மூன்றாம் அலையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தாது உப்புக்கள், வைட்டமின்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்…

நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது செல்கள் மற்றும் புரதங்களால் ஆனது. இவைதான் சாதாரணமானது முதல் கொடிய கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றை தடுத்து நம்முடைய உடலை பாதுகாக்கின்றன.

இவற்றை மேம்படுத்த, ஆற்றல் மிக்கதாக மாற்ற வைட்டமின் சி மிக முக்கியமாகத் தேவை. மிகக் குறுகிய காலத்திலேயே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையானதாக மாற்ற வைட்டமின் சி மிகவும் அவசியம். காய்கறி, பழங்களில் நமக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைத்துவிடுகிறது. குறிப்பாக திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, குடைமிளாய் போன்ற காய்கறி, பழங்களை தினசரி உணவில் அதிக அளவில் எடுத்துக்கொள்வது வைட்டமின் சி கிடைப்பதை உறுதி செய்யும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த வைட்டமின் ஏ-வும் உதவி செய்கிறது. பால், இறைச்சி போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. அது தவிர அடர் பச்சைக் காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், குடைமிளகாய், மாம்பழம், பப்பாளி போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவசியமாக தேவைப்படும் மற்றொரு ஊட்டச்சத்து வைட்டமின் டி. சூரிய ஒளியிலிருந்து நம்முடைய உடல் இதை உற்பத்தி செய்துகொள்ளும். மிகக் குறைந்த அளவில் சில வகையான மீன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, காளான் போன்றவற்றில் இருந்து நமக்கு கிடைக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் வைட்டமின் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும், மிகச்சிறந்த ஆன்டிஆக்‌ஸிடண்ட் வைட்டமின் இ. இது இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. வைட்டமின் இ சத்தானது பாதாம், வேர்க்கடலை, கீரை, மாம்பழம், குடைமிளகாய் போன்றவற்றில் நிறைவாக உள்ளது.

புதிய நோய் எதிர்ப்பு செல்கள் உற்பத்தியாவதற்குத் துத்தநாகம் என்ற தாது உப்பு மிகமிக அவசியம். தொடர்ந்து துத்தநாகம் உள்ள உணவை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பால் பொருட்கள், இறைச்சி, பயிறு வகைகள், பருப்பு வகைகள், விதைகள், முந்திரி, பாதாம், வேர்க்கடலை, முட்டை போன்றவற்றில் துத்தநாகம் உள்ளது