இணையதளம் வாயிலாக பள்ளிகள் ஒருங்கிணைப்பு

இணையதளம் வாயிலாக பள்ளிகள் ஒருங்கிணைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

இணையதளம் வாயிலாக பள்ளிகள் ஒருங்கிணைப்பு
”ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,” என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான ‘ஆன்-லைன்’ விண்ணப்ப முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை, ‘கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்திய அளவில், உயர்கல்வித்துறையில் வளர்ச்சி, 23 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் தான், 44.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுஉள்ளது.

பொறியியல் கல்லுாரிகளில், ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பாடத்திட்டம், ஒரு வரலாறு படைக்கும் பாடத்திட்டமாக அமைய உள்ளது.

ஆறு, ஒன்பது, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அத்தனை பேருக்கும் சி.பி.எஸ்.இ., பாடத்தை மிஞ்சும் வகையில், புதிய திட்டம் இருக்கும். இந்த ஆண்டில், 3,000 பள்ளி களில், ‘ஸ்மார்ட் கிளாஸ்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்துக்கு, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக, ‘ஸ்மார்ட் கிளாஸ்’ அமைக்கப்படும். ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை, இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அண்ணா பல்கலை, இன்ஜினியரிங் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.