தெற்கு ரயில்வேயில் இருக்கும் 8 ரயில்வே பள்ளிகளை மூட உத்தரவ

தெற்கு ரயில்வேயில் இருக்கும் 8 ரயில்வே பள்ளிகளை மூட உத்தரவு 2,500 மாணவர்கள் பாதிப்பு

 

தெற்கு ரயில்வேயில் இருக்கும் 8 ரயில்வே பள்ளிகளை மூட உத்தரவ
ரயில்வே ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை எளியவர்களின் குழந்தைகள் படிக்கும் வகையில் நாடுமுழுவதும் நூற்றுக்கணக்கான ரயில்வே பள்ளி கள் இயங்கி வருகின்றன.

இதில், தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை பெரம்பூர், அரக்கோணம், திருச்சி, ஈரோடு, விழுப்புரம், ஜோலார்பேட்டை, போத்தனூர், பாலக்காடு ஆகிய இடங்க ளில் 8 உயர் நிலை,மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன.

இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 200 அலுவலக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

ரயில்வே துறையில், மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட விவேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி, ரயில்வே துறையின் நிர்வாகத்தில் இருந்து பள்ளி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தைத் தனியாக பிரிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

இவற்றை ரயில்வே அமைச்சகம் செயல் படுத்தக்கூடாது என வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கங்கள்ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

இந்நிலையில், தெற்கு ரயில்வே, ரயில்வே பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “வரும் 2018-19 கல்வி ஆண்டு முதல் ரயில்வே பள்ளிகளில் புதிதாக குழந்தைகளை சேர்க்கக்கூடாது. வரும் 2019-20 ஆண்டு முதல் இங்குள்ள மாணவர்களை வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இங்கு பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ரயில்வேயில் உள்ள பணியிடங்களில் அமர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதி காரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இது ரயில்வே வாரியத்தின் உத்தரவு. இதை நாங்கள் பின்பற்றுகிறோம்’’ என்றார்.

டிஆர்இயு உதவித் தலைவர் இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “விவேக் தேப்ராய் கமிட்டியின் பரிந்துரைகளைப் பின்பற்றக்கூடாது என தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இதற்கிடையே, தற்போது பள்ளிகளை திடீரென மூடும் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இதற்கென விரைவில் நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். தமிழகத்தில் இதற் கான தேதியை விரைவில் அறிவிப்போம்’’ என்றார்.