நீட் தேர்வுக்கு தயாராகும் ஏழை மாணவர்கள் பயன்பெற புதிய செல்போன் செயலி அறிமுகம்

நீட் தேர்வுக்கு தயாராகும் ஏழை மாணவர்கள் பயன்பெற புதிய செல்போன் செயலி அறிமுகம் ‘டெக் ஃபார் ஆல்’ அறக்கட்டளை நிறுவனர் ஜி.பி. ராம்பிரகாஷ் தகவல்

நீட் தேர்வுக்கு தயாராகும் ஏழை மாணவர்கள் பயன்பெற புதிய செல்போன் செயலி அறிமுகம்

நீட் தேர்வுக்குத் தயாராகும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய செல்போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் – AYUSH) படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயம் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் வரும் மே மாதம் 6-ம் தேதி நடக்கிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் நடக்கும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இலவச பயிற்சி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக தமிழக அரசு அளித்தது. வசதிபடைத்த மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி நீட் தேர்வுக்கு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘டெக் ஃபார் ஆல்’ என்ற அறக்கட்டளை ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘T4P Lets Act’ புதிய செல்போன் செயலியை (மொபைல் ஆப்) அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் www.tech4thepeople.in என்ற இணையதளத்தில் சென்று இந்தச் செயலியை மாணவர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான இந்த புதிய செயலி குறித்து ‘டெக் ஃபார் ஆல்’ அறக்கட்டளை நிறுவனர் ஜி.பி. ராம்பிரகாஷ் கூறியதாவது: ஏழை மாணவர்களின் (நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பு) கனவு நனவாகும் வகையில் இந்தச் செயலி கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 3,300 மாணவர்கள் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மாணவர்கள் செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து நீட் தேர்வுக்கு தயாராகலாம்.

இந்த செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நீட் தொடர்பான பாடங்களின் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) வகுப்புகள் வீடியோ வடிவில் இடம்பெற்றுள்ளன. மாதிரி வினாத்தாள் மேலும் நீட் தேர்வு மாதிரி வினாத்தாள், நீட் தேர்வு குறித்த ஆலோசனைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

இந்தச் செயலியை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இவ்வாறு ஜி.பி. ராம்பிரகாஷ் தெரிவித்தார்.